கோவை: கோவையில் அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை: கோவையில் அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, திமுக சார்பில் இன்று குறிச்சி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல் துறை வாகனத்தை செல்ல விடாமல் தடுத்து, திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
மேலும், நாஞ்சில் சம்பத்தினை விடுதலை செய்யக் கோரி, பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ய முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க வினர், இந்தியாவில் ஊழல் செய்வதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலிடத்தில் இருக்கிறார், என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத் :-
சிறைச்சாலை எனக்கு சிறகு தயாரிக்கும் இடம். கைது செய்யப்பட்டதற்காக அஞ்சப்போவதில்லை. இந்த ஆட்சியின் ஆயுள் முடியப்போகிறது, அதிமுக ஆட்சி ஆஸ்தமனமாகி சூரியன் உதிக்கப்போகிறது, என அவர் தெரிவித்தார்.
கூட்டுறவுக் கடனை முதலமைச்சர் ரத்து செய்திருப்பது, திமுக தலைவர் ஸ்டாலினின் நீண்ட கால கோரிக்கை எனவும், என்ன செய்தாலும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிவித்தார். ஸ்டாலின் சொல்வது தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது எனவும், எடப்பாடி பழனிசாமி பெயருக்கு தான் முதலமைச்சர். ஆனால் எங்கள் மண்ணை ஆளுவது ஸ்டாலின் தான் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த போராட்டம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.