பணி பாதுகாப்பு, பொய் வழக்குகளை கண்டித்து - கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்பாட்டம்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, ஊழியர்கள் மீது போடபட்டுள்ள பொய் லஞ்ச வழக்குகளை கண்டிப்பதாக, இன்று கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொய் வழக்குகள், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட டாஸ்மாக் பணியாளர்கள், கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து, அரசுக்கு வருவாய் தேடி தந்த பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், காழ்புணர்ச்சி காரணமாக பழிவாங்கல் போக்கை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக பேசிய பாட்டாளி தொழிற்ச்சங்க பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் ராமசுந்தரம், டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் பொய்யான குற்றச்சாட்டு கூறி கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், பார் ஒப்பந்ததாரர் சிவமணி பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஊழியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும் உடனடியாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் ஆணை, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது,டாஸ்மாக் பாட்டாளி தொழிற்ச்சங்க மாநில துணை செயலாளர், மாவட்ட தலைவர் சுதீர், மாவட்ட பொருளாளர் பாலசஞ்சீவி, பரமசிவம் வேடியபபன் மற்றும் சி ஐடியு, எல்.பி.எப் உள்ளிட்ட சங்கத்தினர் கலந்துகொண்டனர்.