கோவை: சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் கோவை சண்முகசுந்தரமும், கோவை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.டி மணிகண்டனும் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தவர் கோவை சண்முகசுந்தரம். அவர் தனது சொந்தப் பணி மற்றும் தொழில் காரணமாக கட்சிப் பணிகளில் ஈடுபட இயலாமல் இருப்பதால் அவர் வகித்துவந்த முதன்மை துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த பதவியை சமத்துவ மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் இன்று முதல் கூடுதலாக கவனிப்பார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வகிக்கும் ராதிகா சரத்குமாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்சிப் பணிகளில் திறம்பட சிறப்பாக விவேகத்துடனும் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல் கோவை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சி.டி மணிகண்டன் கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இன்று முதல் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்கத்தின் நிர்வாகிகள் யாரும் அவருடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். கோவை புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு விரைவில் மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.