கோவை: கோவையில் திமுகவின் மக்கள் கிராம சபையில் பெண்ணை தாக்கிய விவகாரம்: 4 பேர் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்..!
கோவை: கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட 4 பேர் இன்று கோர்ட்டில் ஆஜராகினர்.
கடந்த மாதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் சபை கூட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தினார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில், பூங்கொடி என்ற அதிமுகவை சேர்ந்த பெண் கேள்வி எழுப்புவது போல், சலசலப்பை ஏற்ப்படுத்தியதாக கூறி அவர் அப்புறப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவினர் 4 பேரும் மனுதாக்கல் செய்து இருந்த நிலையில், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்து ஜாமீன் பெற உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருந்தது.
இதையடுத்து, திமுகவை சேர்ந்த ராஜேந்திரன், சாமிபையன், ரங்கசாமி, ராஜா ஆகியோர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை இன்று மாலை நான்கு மணிக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.