கோவை: கோவையில் ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!
கோவை: கோவையில் ஆடுகள், நாய்களை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது!
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி நள்ளிரவு குவாரி ஆபீஸ் பகுதிக்கு வந்த சிறுத்தை ஒரு வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்திருந்தது.
மேலும் வீட்டின் காம்பவுன்ட் சுவரில் அமர்ந்திருந்த சிறுத்தை, சீனிவாசன் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை வேட்டையாட முயன்றது. ஆனால் நாய் தொடர்ந்து கத்தவே நாயை விட்டுவிட்டு சிறுத்தை தப்பிச் சென்றது. இதையடுத்து மட்டப்பாரைபகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிக்குள் சிறுத்தை நுழைந்து அங்கிருந்த நான்கு ஆடுகளைக் கடித்தது. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து காந்திநகர் மற்றும் மட்டப்பாரை ஆகிய இடங்களில் மதுக்கரை வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் காந்தி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. சிறுத்தையை வனத்துறை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில்விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.