கோவை: மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசுவாமி - வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
கோவை: மருதமலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசுவாமி - வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்துபூஜையும், 22-ந் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண நிகழ்வின் தொடக்கமாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனோ பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு பாதயாத்திரை வந்த பக்தர்கள் மற்றும் பால்குடம், பால்காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
திருக்கல்யாண நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் மேலும் மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. வழக்கமாக வெகு விமரிசையாக நடைபெறும் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஆரவாரமின்றி நடைபெற்றது.