கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது - கோவையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
கோவை: சசிகலா விடுதலையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், பாஜக - அதிமுக கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கோவையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ராகுல்காந்திவருகின்ற 23 முதல் 25 ம் தேதி வரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார், எனத் தெரிவித்தார். மேலும், சீரழித்த ஆட்சியை மாற்றுவது, மதச்சார்பற்ற கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்வார், என்றார்.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிளை கூட்டணி கட்சிகளுக்கு தரக்கூடாது என்ற உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கூட்டணி கட்சிகள் வைத்து என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார்.
மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இணைந்துள்ளதாகவும், இது போன்ற சிறு சிறு பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வோம், என்றார்.
கமல்ஹாசன் தனித்து நின்றால் பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் எனவும், கமல்ஹாசனை பி டீம் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும், கமல்ஹாசனால் எங்களது கூட்டணி வாக்கு வங்கி பாதிக்ககூடாது, என நினைக்கிறோம் என்றார். கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது எனவும், அவர் தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பு மற்றும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் தொகுதிகளை கேட்கும் எனவும், மூன்றாவது அணி தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக முடிவு செய்வது கொடுமையானது எனவும், சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை, எனவும் அவர் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் கிடையாது எனவும், 7 பேர் விடுதலை செய்யப்பட்டால் அதை காங்கிரஸ் எதிர்க்கவும் செய்யாது, ஆதரிக்கவும் செய்யாது என்றார். நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் மன்னித்து விடுதலை செய்யலாம் என்றார்.
இலங்கை கடர்படையின் படகு மோதி இரு மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசுகையில், கடுமையான தண்டனைகளை தவிர்க்குமாறு ராஜபக்ஷேவிற்க்கு கோரிக்கை வைத்தோம். இதனை இலங்கையிலுள்ள தமிழக மீனவர்கள் தான் எதிர்ப்பதாகவும், கச்சத்தீவு வழங்கபட்டதில் ராஜதந்திரம் உள்ளதாக தெரிவித்தார். சீனாவின் பிடியில் இலங்கை சிக்காமல் இருக்க மேற்கொண்ட நடவடிக்கை எனவும், தற்போது நிலைமை அவ்வாறு இல்லை எனவே பாஜக மீட்க முயற்சிப்பதாக கூறினார்.
கூட்டணி இல்லாமல்
இருந்திருந்தால், பீகாரில் 40 தொகுதிகளில் தான் தேஜஸ் வெற்றி பெற்று இருப்பார், என்றார்.
கார்ப்பரேட் ஓரிரு வருடங்கள் நல்ல லாபம் கொடுப்பார்கள், பின்னர் நிறுத்தி விடுவீர்கள். விவசாய சட்டத்தில் குறைந்த பட்ச ஆதாய விலையை சட்டத்தில் கொண்டு வாருங்கள் என்பது தான் கோரிக்கையாக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.
மோடியின் நடவடிக்கையால் பி எஸ் என் எல் நிறுவனத்தை மூடிவிட்டு ஜியோ என்கின்ற ஒற்றை தொலை தொடர்பை தான் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியர்கள் தள்ளப்படுவார்கள் என்று குற்றம் சாட்டினார்.