கோவை குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தேமுதிக மனு..!
கோவை: கோவையில் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தேமுதிகவினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட தேமுதிக செயலாளர் (தெற்கு) தினகரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தேமுதிகவினர்மனு கொடுத்தனர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவையில் மக்களுக்கு இடையூறாக பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. கிணத்துக்கடவு ஒன்றியம், பனப்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஏற்கனவே மனு கொடுத்திருந்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை.
இதேபோல், கிணத்துக்கடவு பேரூராட்சி ஆர்.எஸ்.ரோடு, சின்னியம்பாளையம் பஸ்நிலையம் அருகில், கலங்கல் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி பிப்ரவரி மாதம் டாஸ்மாக் கடைகள் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்,இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.