பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி கோவையில் சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
கோவை: பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு 5 செண்ட் இடம் வழங்கக்கோரி, சமூக நீதி கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.
பஞ்சமி நிலங்களை மீட்க சட்டம் இயற்றக்கோரியும், நிலமில்லாத மக்களுக்கு 5 செண்ட் நிலம் வழங்கக்கோரியும் கண்டன கோசங்களை எழுப்பினர். மேலும், பஞ்சமி நிலங்களை மீட்டு விவசாயம் செய்வதற்குஒரு ஏக்கர் நிலம் வழங்கவும் வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் 11.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன எனவும் இதில் கோவை வடக்கு வட்டாட்சியருக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 1200 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளதாகவும், அதில் மற்ற சமூகத்தினர் 30% , பட்டியலின மக்களின் பெயரில் மாற்று சாதியினர் மறை முகமாக 70% நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர், என குற்றம் சாட்டினர்.
இது குறித்து பேசிய, சமூக நீதி கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம்,"செங்கல் சூளைகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார்கள் என இந்த பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலங்களை மீட்டுத்தர ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை", என்று தெரிவித்தார்.