பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் அஜித் (21) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை கோட்டூரில் இருந்து ஆழியார் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பொங்காலியூர் பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவரது மகன் மகேஸ்வரன் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கோபால் (22), இருவரும் ஆழியாரில் இருந்து கோட்டூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின.
இதில், மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த கோபால் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அஜித் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற கோட்டூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.