கோவை: குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கோவை: குழந்தையின் உயிரைக் காப்பாற்ற துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் நாஞ்சி கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன் ஆருரன். பிறந்து இரண்டு மாதங்கள் ஆனநிலையில் குழந்தையின் இதயம் வீங்கியதால் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக அந்தக் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்தனர், இதையடுத்து குழந்தையை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவர்கள் கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து மூன்று மணி நேரத்துக்குள் குழந்தையை கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதி என்பவர் இந்தப் பணியில் இறங்கினார். இந்த உயிர் போராட்டத்தில் அனைத்து ஓட்டுநர்கள் நலச்சங்கத்தினரின் உதவியும் கோரப்பட்டது, இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் பயணிக்கும் அனைத்து சாலைகளையும், தற்காலிகமாக மாற்றி அமைக்க திருச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடமும், கரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் உதவி கேட்கப்பட்டது. சூழ்நிலையைப் புரிந்துகொண்ட காவல் துறையினர் குழந்தையை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் கடக்கும் அனைத்து சாலைகளில் உள்ள சிக்னல்களை நிறுத்தி இந்த வாகனத்தை விரைவில் செல்ல வழிவகுத்தனர்.

தஞ்சாவூர் ஆர்.கே.மருத்துவமனையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு துவங்கப்பட்ட இந்த பயணம்,காலை 8.20 மணிக்கு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தை சேர்க்கப்பட்டது. குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனை, மருத்துவர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தஞ்சாவூரில் இருந்து கோவைக்கு 280 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து வந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு குவிகிறது. குழந்தைக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என அனைத்து வாகன ஓட்டுநர்களும், அதன் நல சங்க நிர்வாகிகளும் வேண்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.