கோவை: கோவையில் உயர் மின்சாரத்தை திருடி மின்வேலி அமைத்ததில், மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலியானது தெரியவந்துள்ளது.
கோவை: கோவையில் உயர் மின்சாரத்தை திருடி மின்வேலி அமைத்ததில், மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலியானது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆலந்துறை, வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சோளம், வாழை, நெல் பயிரிடப்பட்டுள்ளதால் நாள்தோறும் அப்பகுதிக்கு யானைகள் உணவு தேடி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட செம்மேடு கிராமத்துக்குள் இரண்டு ஆண் யானைகள் தனித்தனியாக வந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் காணப்பட்ட யானையை இன்று அதிகாலை 5.30 மணி அளவில் முள்ளாங்காடு வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்த யானையுடன் வந்த மற்றொரு யானை செம்மேடு குளத்து ஏரிப்பகுதியில் உள்ள துரை என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்களை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியது. அப்போது வயலைச் சுற்றி போடப்பட்டிருந்த உயர் மின்னழுத்த வேலியில் யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின்பேரில் போளுவாம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் அதன் வாசனை யானையைக் கவர்ந்திருக்கிறது. இதையடுத்து அதை உண்பதற்காக வந்த யானை நெற்பயிர்களை சாப்பிட்டு முடித்ததும் வெளியே செல்லும்போது உயர் அழுத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து வனத்துறை மருத்துவர் சுகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைக்கு 22 வயது இருக்கும் எனவும் பிரேதப் பரிசோதனையின் முடிவில் முழு விவரம் தெரியவரும் எனவும் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
வனச்சரகர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, பண்ணை வயலைச் சுற்றி இரும்புக் கம்பிலான வேலி அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் உயர் மின்சாரம் செல்லும் பிரதான மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு கம்பி வேலிக்கு செலுத்தப்பட்டதும் தெரியவந்தது. பண்ணையின் உரிமையாளர் துரை நேற்று இரவு தோட்டத்தில் இருந்ததாக அருகிலுள்ள தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யானை வேலியில் சிக்கி இறந்ததும் பண்ணை வயலின் உரிமையாளர் வேலிக்கு மின் இணைப்பு கொடுத்த மின் வயர்களை அகற்றிவிட்டு தலமறைவாகியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக அவர்மீது வன உயிரின சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யானையை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.