கோவை: காரமடையில், நகைக்கடை உரிமையாளரை தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை: காரமடையில், நகைக்கடை உரிமையாளரை தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மேற்கு ரத வீதியில் உள்ள சோலையன் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கடையில் உள்ள தங்க ஆபரணங்களை கடையின் உரிமையாளர் சாந்தாமணியிடம் கேட்டு வாங்கி பார்த்துகொண்டிருந்தாராம். அப்போது உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு அங்கிருந்த நகைகளை திருடியிருக்கிறார். அவற்றை தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்ததை கடை உரிமையாளர் சாந்தாமணி கவனித்துவிட்டார்.
சுதாரித்துக்கொண்ட சாந்தாமணி கடைக்கு வெளியே வந்து உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைக்க முற்பட்டார். ஆனால் அந்த மர்ம நபர் சாந்தாமணியை கீழே தள்ளி தாக்கிவிட்டு 6 சவரன் தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். இதையடுத்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் செய்தார். கடையில் இருந்த சி.சி.டிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.