திருப்பூர்: விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்ற கட்சி தி.மு.க என்று திருப்பூரில் பேசிய தமிழக முதல்வர் காட்டமாக கூறினார்.
திருப்பூர்: விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்ற கட்சி தி.மு.க என்று திருப்பூரில் பேசிய தமிழக முதல்வர் காட்டமாக கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கோவையிலிருந்து சேலம் செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்றபோது அவருக்கு பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அப்போது பூங்கொத்துக்கள், ஆளுயர மாலை, சால்வை அணிவித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது மக்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

``2021-ம் ஆண்டு மீண்டும் பொதுமக்களாகிய உங்களின் மகத்தான ஆதரவுடன் புரட்சித்தலைவர் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலையில் வாக்களிக்க வேண்டும்.இன்றைக்கு 1,652 கோடி ரூபாயில் அத்திக்கடவு அவினாசி திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதற்கட்ட பணி மார்ச் மாதத்தில் நிறைவடைந்ததும் அதை துவக்கி வைக்க உள்ளேன். எனது தலைமையிலான அம்மாவின் அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அந்தத் திட்டம் முழுமை பெறும்.
திருப்பூரில் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் சிகிச்சைபெற தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைத்த அரசு நமது அம்மாவின் அரசு. ஒன்றியப் பகுதிகளில் இரண்டு மினி கிளினிக்குகளை அமைத்திருக்கிறோம். நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கிறோம். 10 ஊராட்சிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 71 கோடி ரூபாய் செலவில் அன்னூர் - மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம், ஊராட்சிப் பகுதிகளில் கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாகப் பிரிக்கப்பட்டு பெண்களுக்கென தனி உயர்நிலைப்பள்ளி உருவாக்கி இருக்கிறோம்.
திருப்பூர் மாநகராட்சிக்கு 992 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புஷ்பா தியேட்டர் முதல் பாண்டியன் நகர் வரை 900 கோடியில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்கள் நலனுக்காக 75 கோடி ருபாய் மதிப்பீட்டில் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. குடி மராமத்துப் பணிகள் மூலம் 18 குட்டைகள் தூர் வாரப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் ரூபாய் 2.10 மதிப்பீட்டில் 4,000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. நெருப்பெரிச்சல் பகுதியில், குடிசை மாற்று வாரியம் மூலம் 2,250 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, `ரவுடி ரவுடிதான்' என்பதுபோல `எடப்பாடி பழனிசாமி விவசாயி விவசாயிதான்' என்கிறார். விவசாயியை ரவுடியோடு ஒப்பிட்டுப் பேசும், ஸ்டாலின் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். விவசாயி என்று சொன்னால் ஸ்டாலின் அவர்களுக்கு கோபம் வரக்காரணம் என்ன தெரியுமா? பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது விவசாயிகளை சுட்டு வீழ்த்திய அரசு தி.மு.க அரசு. விவசாயி என்று சொன்னாலே ஸ்டாலினுக்கு ஷாக் அடிக்கிறது. விவசாயிகளைப்பற்றி பேசுவதற்கு அருகதையற்ற கட்சி தி.மு.க.
தி.மு.க. விவசாயிகளுக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறது. அ.தி.மு.க. அரசுதான் நீர் மேலாண்மைத் திட்டத்தை கொண்டுவந்து, தேசிய அளவில் விருதையும் பெற்றிருக்கிறது. குடிமராமத்துத் திட்டத்தால் ஏரிகள் தூர் வாரப்பட்டு, மழைக்காலத்தில் நீர் நிரம்பி வழிகிறது. ஆனால் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளும் அரசின்மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகிறார். இதையெல்லாம் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று சொன்னேன்; ஸ்டாலின் அதையும் நிறுத்தப் பார்க்கிறார். இப்போதுகூட தமிழக ரேசன் கார்டுகள் உள்ள அனைவருக்கும் 2,500 ரூபாய் அறிவித்ததைக்கூட ஸ்டாலின் நிறுத்தப் பார்க்கிறார். அ.தி.மு.க.வினர் டோக்கன் வழங்குவதாகச் சொல்கிறார். எங்களுக்கு அது வேலையில்லை. ரேசன் கடை அலுவலர்கள் வழங்குவார்கள்.
கொரோனா காலத்தில்கூட எல்லா குடும்பங்களுக்கும் 1,000 ரூபாய் கொடுத்தோம். 8 மாதம் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுத்த அரசு அ.தி.மு.க. அரசு. மக்களுக்காக உழைக்கின்ற அரசு அம்மா அரசு. உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க. கட்சி. எனவே தி.மு.க.வினர் எதைச் சொன்னாலும் நம்பாதீர்கள். தேர்தல் நேரத்தில் செயல்படுத்த இயலாத திட்டங்களைச் சொல்கிறார். இவர்கள் ஆட்சியில் இருப்பதுபோல கடன் தள்ளுபடி எனக் கூறுகிறார். பொய் பேசி, மக்களை ஏமாற்றி கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறீர்களா? தமிழகத்திற்கென ஏதேனும் திட்டத்தைப் பெற்றுத் தந்திருக்கிறீர்களா? இந்தத் தேர்தலிலும் இதேபோன்று தில்லுமுல்லு வேலைகளைச் செய்வார்கள். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவிப்பார்கள். மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட வேண்டாம். உங்கள் வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்துக்கே அளிக்க வேண்டும். தொழிற்சாலை, மருத்துவம் மற்றும் சாலை வசதிகளில் இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கின்ற மாநிலம் தமிழகம்தான். அவினாசியில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் எடுக்கப்படாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்''
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என். விஜயகுமார், குணசேகரன் உள்ளிட்ட மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.