கோவை: நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர்களை போக்குவரத்துத் துறையினர் இன்று முதல் அகற்றி வருகின்றன
கோவை: நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர்களை போக்குவரத்துத் துறையினர் இன்று முதல் அகற்றி வருகின்றனர்.
நான்கு சக்கர இலகு ரக வாகனங்களில் உள்ள பம்பர் களால் எதிரே வரும் வாகனங்களின்மீது மோதும் போது சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாலும் சென்சார் போன்றவை செயல்படாமல் போவதாலும் பம்பரை அகற்ற வேண்டுமென கடந்த 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் பம்பரை அகற்ற உத்தரவிட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப்பணி தாமதமான நிலையில் இன்று முதல் கோவை மாவட்டம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர் சோதனை மேற்கொண்டு பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களில் பம்பர்களை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய போக்குவரத்துத் துறை சார்பில் வ.உ.சி மைதானப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பம்பர் பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் உள்ள பம்பர்களை அகற்றி 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவையில் நான்கு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பம்பர் பொறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்களைக் கண்டறிந்து போக்குவரத்து விதிகளின் படி பம்பர்களை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று இனி தொடர்ந்து தணிக்கை செய்யப்படும்.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், உயர் நீதிமன்றம், போக்குவரத்து ஆணையர், மாவட்ட ஆட்சியர், இணை கோட்ட ஆணையர் ஆகியோரது ஆணையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் பம்பரினால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதும்போது வாகனங்களில் பயணிப்பவர்கள் அல்லது எதிரே வருபவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் பம்பர் இருந்தால் வாகனங்களில் இருக்கும் சென்சார்கள் சில நேரங்களில் வேலை செய்யாமல் போகிறது. இதனால் ஏர்பேக் செயல்படுவதில்லை.
வாகனத்தின் எடை அதிகரிப்பதால் பிரேக் பிடிக்கும் போது வாகனங்களின் மைய விசை மாறி விபத்திற்குள்ளாகிறது. எனவே மக்கள் தாங்களாகவே முன்வந்து அவரவர் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்றிட வேண்டும். அபராதத்தொகை என்று பார்த்தால் முதல்கட்டமாக 500 ரூபாயும் இரண்டாம் முறை 10,000 ரூபாய் வரையும் அபராதமோ அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டனையோ விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.
பம்பர் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் இரு சக்கர வாகனங்களில் கூடுதல் பாகங்கள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.