கோவை: கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் கழிவுநீர் வாகனங்கள் கழிவுநீரை ஒடைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் நேரடியாக விடக்கூடாது, என மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்களிடம், ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கோவை: கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் கழிவுநீர் வாகனங்கள் கழிவுநீரை ஒடைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் நேரடியாக விடக்கூடாது, என மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்களிடம், ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், இன்னமும் சில தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் இதனை பொருட்படுத்தாமல் மிகவும் அலட்சியமாக செயல்படுகின்றனர். குறிப்பாக ஊரக பகுதியில், கால்வாய்கள் மற்றும் குட்டைகளில் சுத்தகரிப்பு செய்யாமலேயே கழிவுநீர் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வரும் நிலையில், கோவை நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியிில் இதே போல் ஒரு அவலம் நடந்து வருகிறது.
வீரபாண்டி பிரிவில் ஓடையில் கலக்கப்படும் கழிவு நீர்..!
கோவை அருகே மேட்டுப்பாளையம் சாலையில் No:4 வீரபாண்டி பிரிவு பேரூராட்சிக்குட்பட்ட கே. ஆர். நகர் பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு செல்லக்கூடிய கிளை ஒடை உள்ளது. மழை காலங்களில் கெளசிகா நதியின் மழைநீர் இந்த ஒடை வழியாக பயணித்து பவானி ஆறு சென்றடைகிறது. இந்த ஒடை செல்லும் வழியில், பல ஆயரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன.
இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம், நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சிகளின் கழிவு நீர் நேரடியாக இந்த ஒடை வழியாக எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக விடப்படுகிறது.
கழிவுகளை குடியிருப்பு பகுதியில் விடுவதா..? மக்கள் கேள்வி.

இந்நிலையில், நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட கே. ஆர். நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கோவை மாநகராட்சியின் அனுமதி பெற்ற தனியார் கழிவு நீர் வாகனம் ஒன்று கழிவுநீரை நேரடியாக ஒடையில் இன்று திறந்து விட்டனர். இதனால், அதிர்ச்சியான அப்பகுதி மக்கள் கழிவுநீர் வாகன ஊழியர்களிடம் இவ்வாறு விடக்கூடாது, எனக் கூறியுள்ளனர்.
அதற்கு கழிவுநீர் வாகன ஊழியர்கள் அப்பகுதி மக்களிடம் கூறுகையில், "இது நம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியின் கழிவுநீர். கே. ஆர். நகர் அருகே ரயில் பாலம் உள்ளதால் சாக்கடை கால்வாய்கள் மூலம் பிற பகுதிகளின் கழிவுநீரை கொண்டுவர முடியாது. அதனால் கழிவுநீர் வாகனங்கள் மூலம் கொண்டு வருகிறோம். அதனை இங்கு விடுகிறோம். உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள்," என்று கூறியுள்ளனர்.
நோய் தொற்றுகள் பரவும் அபாயம்..!
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நியூட்டன் என்பவர் கூறுகையில், " கழிவு நீர் நேரடியாக இப்பகுதியில் திறந்துவிடப்படுவதால் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் வாகன ஊழியர்களிடம் பல முறை எடுத்து சொல்லியும் அவர்கள் இவ்வாறு விதிகளை மீறி கழிவுநீர்களை விடுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும் - மாநகராட்சி அறிக்கை
கடந்த 5ம் தேதி, கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் கழிவு நீர் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:
மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே கழிவுநீர் சேகரிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாமல் கழிவுநீர் சேகரிக்கும் பணியில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கழிவுகளை, சாக்கடை, குளங்கள் மற்றும் ஒதுக்குப்புறமான திறந்தவெளி இடங்களில் கொட்டினால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.