பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த வேட்டைத்தடுப்பு காவலர் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் பெற்று தரப்பட்டது.
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த வேட்டைத்தடுப்பு காவலர் குடும்பத்திற்கு வனத்துறை மூலம் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் பெற்று தரப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி சரகத்தில் வேட்டைத்தடுப்பு காவலராக பணியாற்றி வந்தவர், சந்திரன். பழங்குடியின இனத்தின் மலைமலசர் பிரிவை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆழியாறு பகுதியில் பணியாற்றி வந்த போது பாம்பு கடித்து உயிரிழந்தார்.
வனத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வனவிலங்குகள் யானை, சிறுத்தை, புலி தாக்கி உயிரிழந்தால் நிவாரணத் தொகை வழங்கப்பட்டும். ஆனால், பாம்பு கடித்து உயிரிழந்தால் நிவாரண தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், வேட்டை தடுப்பு காவலர் சந்திரனுக்கு வனத்துறை சார்பில் காப்பீடு செய்யப்பட்டு இருந்தும் பல்வேறு காரணங்களால் சந்திரன் குடும்பத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக காப்பீட்டு தொகை கிடைக்காமல் இருந்தது. இது குறித்து, சந்திரனின் மனைவி கலையரசி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியரிடம் காப்பீட்டு தொகை பெற்று தர கோரிக்கை விடுத்திருந்தார்.
வனத்துறையினர் முயற்சியின் பேரில் சந்திரன் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 5 லட்சம் காப்பீட்டு தொகை பெற்று தரப்பட்டது. மேலும், வேட்டைத்தடுப்பு காவலர் சந்திரன் குடும்பத்தின் ஒருவருக்கு வனத்துறையில் தற்காலிக பணி வழங்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் அன்வர்தீன் உத்திரவிட்டார்.