கோவை: பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பிரபு என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.
கோவை: பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பிரபு என்பவர் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேளச்சேரியில் நடைபெற்ற அகில பாரத அனுமன் சேனா கூட்டத்தில், அதன் தலைவர் எஸ். வி. ஸ்ரீதர் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்களான திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஸ்டாலின், வைகோ, உள்ளிட்ட மேலும் பல தலைவர்களை ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல், திருமாவளவனை கொலை செய்வேன் என்றும் பேசியுள்ளார்.
இது தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பொது வெளியில் மிரட்டல் விடுத்த நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சியில் இன்று ஸ்ரீதர் கைது செய்யக் கோரி, அவர் வீடு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பொள்ளாச்சியில் பரபரப்பு நிலவியது.
இதனை தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், அகில பாரத அனுமன் சேனா தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.