கோவை: வெற்றிவேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வேலுடன் பஜனை பாடல்கள் பாடி பா.ஜ.கவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: வெற்றிவேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வேலுடன் பஜனை பாடல்கள் பாடி பா.ஜ.கவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை திருத்தனியில் இன்று துவங்கி அடுத்த மாதம் 6ம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என அக்கட்சி அறிவித்திருந்தது. கொரோனா தொற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதாக இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உள்ளது.
தமிழக அரசு சில தளர்வுகள் அறிவித்து உள்ள நிலையில், நவம்பர் 16ம் தேதி வரை 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் நாளை நடைபெறும் பேரணிக்கு சட்டரீதியாக அனுமதி அளிக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் கூறினார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் முருகன் தலைமையில் துவங்கும் வெற்றி வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்திய நிலையில், இன்று காலை மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஏழு வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர் சேகர், இந்து முன்னணி மாநில பேச்சாளர் முகாம்பிகை மணி தலைமையில் பா.ஜ.கவினர் 12 அடி வேலுடன் முருகன் பாடல்களை பாடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெண்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகம் முன் குவிந்துள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து, முருக பெருமான் பாடல்களை பாடி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.