திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் வீட்டிற்கு கடந்த 28ந் தேதி காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன் வீட்டிற்கு கடந்த 28ந் தேதி காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில், மூன்றாவது நாளான இன்று, பையா கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று மதியம் பையா கிருஷ்ணனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து, நெஞ்சு வலி ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை, உடனடியாக காளப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து தகவல் அறிந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் மருத்துவமனை முன்பு குவிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, மருத்துவமனையின் வாசல் முன்பு வந்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களை பார்த்து கை அசைத்து விட்டு, மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார்.
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக, திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம், கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.