கோவை: கோவையில் பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரியைக் கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் பெற்ற தீயணைப்பு அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமானோர் பட்டாசு கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபடுவது வழக்கம். பட்டாசு கடைகள் அமைக்க பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
குறிப்பாக, கடை வைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பம் பெற்று, அதில் 1 ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு ஐந்து நகல்கள் எடுத்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை, மாநகராட்சி அலுவலகம் என விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், கருவூலத்தில் 500 ரூபாய் செலுத்தி மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ள 300 ரூபாய் வரி தொழில் வரி 750 என செலுத்தப்பட்ட பின்னர், இந்த ஆவணங்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பட்டாசு விற்பனையில் ஈடுபடுபவர்கள் அனுப்பி வைப்பர். இதன் பின்னர் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிமம் வழங்கப்படுவது நடைமுறையாகும்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கோரி குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மதனவேல் என்பவர் விண்ணப்பித்து உள்ளார். இதற்கு அனுமதி தர 6,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கோவை தெற்கு தீயணைப்புத் துறை அதிகாரி சசிக்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மதனவேல் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அப்போது, ரசாயன கலவை கலந்த பணத்தை மதனவேலிடம் கொடுத்து அனுப்பினர்.

லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கணேஷ் தலைமையில் தீயணைப்புத் துறை அதிகாரி சசிகுமாரிடம் பணம் கொடுத்த போது மறைந்து இருந்து, அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சசிகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.