காரை துரத்தும், காட்டு யானை..! டாப்சிலிப் மலை பகுதியா? என வனத்துறையினர் விசாரணை
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள டாப்சிலிப், கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு காட்டு யானை, சிறுத்தை புலி, புலி, புள்ளி மான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் உள்ளன.
ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டடாப்சிலிப் சுற்றுலாத் தலம் இன்னும் திறக்கப்படாமல், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
குறிப்பாக, டாப்சிலிப் பகுதிக்கு வனத்துறையினர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டாப்சிலிப் செல்லும் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று காரை ஒன்றை துரத்தும் வீடியோ காட்சி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, வனத்துறையினரிடம் கேட்ட.போது, டாப்சிலிப்பகுதிக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வனத்துறை ஊழியர்கள் மலைவாழ் மக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
தற்போது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ, டாப்சிலிப் பகுதியில் நடந்தது போல் தெரியவில்லை.
இருப்பினும், சமூக வலைதளங்களில் டாப்சிலிப் என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு வருவதால் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக, தெரிவித்தனர்.