கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனங்கள்/ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் வெளியிட்டுள்ளார்.
கோவை: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் நிறுவனங்கள்/ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, நியமன அலுவலர் தமிழ்செல்வன் தெரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
1. இனிப்பு / காரம் தயாரிப்பாளர்கள் / மொத்த விற்பனை, சில்லரை விற்பனை கடைகளில் பழைய செய்தி தாள்களை விரித்து அதன் மேல் இனிப்பு கார வகைகளில் உள்ள எண்ணெயை உறிஞ்சும் வகையில் கொட்டப்பட்டிருந்தாலும், குவியலுக்கு மேல் பழைய செய்தி தாள்களை கொண்டு மூடி வைக்கப்பட்டு இருந்தாலும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி ரூ.2000/- அபராதம் விதிக்கப்படும்.
2. தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள பேக்கரி, ஓட்டல், திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகுதிகளில் தயார் செய்து விற்பனை செய்யப்படும், இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் தயாரிக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஈக்கள் மொய்க்கும் படி திறந்தவெளியில் வைக்க கூடாது.
3. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை வடிகட்டி திரும்பதிரும்ப இனிப்பு மற்றும் காரவகைகளை தயாரிக்கப் பயன்படுத்துவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
4. இனிப்புகளை தயாரிக்க அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக கலர் நிறமிகள் இனிப்பு வகைகளில் சேர்க்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால், சட்டரீதியான உணவு மாதிரி எடுக்கப்பட்டு, பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்படும். பகுப்பாய்வக அறிக்கையின் அடிப்படையில் உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
5. இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய், நெய் மற்றும் மூலப்பொருட்களின் விபரங்களை முழுமையாக அதன் கொள்முதல் கேனள்களில்டடின் லேபிளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
6. இனிப்பு மற்றும் காரவகைகளை தூய்மையான குடிநீரைக்கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். இந்த இனிப்பு, காரங்களை தயாரித்த பிறகு பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக கழுவி, பூஞ்சை தொற்று வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
7: மேலும் பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக வைக்க வேண்டும் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் முழுமையாக அச்சிடப்படவேண்டும்.
8. இனிப்பு வகைகள் சில்லரை முறையில் (Non packed / Loose sweets) விற்கப்படும் பொருட்களில், காலாவதி தேதி (Best before date) மற்றும் பயன்படுத்தும் தேதி (Use by Date) தயாரிக்கபட்ட உணவுப் பொருளில் எண்ணெய் / நெய் / வானஸ்பதி பயன்படுத்தப்பட்டதா எனவும் பால் சார்ந்த பொருட்கள் பற்றிய பதிவுகள் பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
9. அனைத்து சில்லரை முறையில் விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பொருட்களின் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, பயன்படுத்தும் தேதி போன்ற விபரத்தினை நுகர்வோர் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட வேண்டும்.
10. இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய், நெய் விபரங்கள் தகவல் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
11. இனிப்பு மற்றும் காரவகைகளை பொட்டலம் செய்து விற்கும் போது அவற்றின் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், பேட்ச் எண், தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை அதில் அச்சடித்து விற்பனை செய்யப்பட வேண்டும்.
12. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்கிறவர்கள் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006, பிரிவு 31-ன் கீழ் உரிமம்,/பதிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏற்கனவே உரிமம் பெற்று, காலக்கெடு முடிந்தால் அதனை உடனே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆய்வின் போது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உரிமம்/பதிவு சான்று பெறப்படாதது கண்டறியப்பட்டால் உணவு வணிகரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதிகமாக கலர், நிறமி சேர்த்தல் / சுகாதாரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை தயார் செய்தல், விநியோகித்தல் / உணவு கலப்படம் / தரமற்ற உணவுகள், சமையல் எண்ணெய், பால்/ தண்ணீர் / டீ தூள் மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்தல்,” விற்பனை செய்வது தொடர்பான புகார்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறையின் Whatsapp Number 9444042322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.