கோவை: கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை திருநங்கைகள் உட்பட 3 பேர் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை திருநங்கைகள் உட்பட 3 பேர் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன், ஒர்க்ஷாப் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரிடம் மைக்கேல் என்பவர் தனது ஆட்டோவின் ஆவணங்களை கொடுத்து 30,000 ரூபாய் பெற்று இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தி உள்ளார். பின், இளங்கோவனின் தாய் மைக்கேலை தொடர்பு கொண்டு 10,000 ரூபாய் பணத்திற்கு பதிலாக 9,000 ரூபாய் தான் உள்ளது, எனவும் ஆயிரம் ரூபாய் குறைவாக கொடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.
இதனால், கோபமடைந்த மைக்கேல் இளங்கோவனின் தாயாருடன் சண்டை போட்டுள்ளார். இதனை அறிந்த இளங்கோவன், எனது தாயாரிடம் நீ எவ்வாறு இப்படி பேசலாம் என்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று மைக்கேல் தனது நண்பர்களுடன் தொட்டிபாளையம் சென்று உள்ளார். அங்கு, இளங்கோவனுடன் பண பிரச்சனை தொடர்பாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளங்கோவனை குத்தி உள்ளார்.
இதனை கண்ட, இளங்கோவனின் உறவினர் சவுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் மைக்கேல் கத்தியால் குத்தி விட்டு தனது நண்பர்களுடன் தப்பி உள்ளார். இதனையடுத்து, காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதில் இளங்கோவனின் உறவினரான சௌந்தர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இளங்கோவன், கிருபாகரன், அருண் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பீளமேடு போலீசார் மைக்கேல் மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், மைக்கல் (24), ராகிணி (32), வெண்பா (23) ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.