கோவை: கோவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலியான வரவு - செலவு கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்து 37.74 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இரும்பு தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் சுரபி குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலியான வரவு - செலவு கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்து 37.74 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இரும்பு தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் சுரபி குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டை தலைமையிடமாக கொண்டு சுரபி குழுமம் செயல்பட்டு வருகிறது. இரும்பு தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இந்த குழுமம் சுரபி ஸ்டீல்ஸ், சுரபி அயர்ன் & ஸ்டீல்ஸ், சுரபி ரோலிங் மில் என்ற பெயர்களில் கேரளா மற்றும் கோவை பகுதிகளில் செயல்பட்டு வருகின்றது. இதன் இயக்குனர்களாக காதர் பிள்ளை, அனுஜ் காதர், சனுஜ் காதர் மற்றும் ரூக்கிய காதர் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் தொழில் அபிவிருத்திக்காக 2010 முதல் 2014 வரை ஒப்பணக்கார வீதியிலுள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் கடன் பெற்று இருந்த நிலையில், அவற்றை திரும்ப செலுத்தாமல் போலியான ஆவணங்களை கொடுத்திருப்பது 2019ம் ஆண்டு வங்கி நிர்வாகம் மேற்கொண்ட தணிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இரண்டு கணக்கு புத்தகங்களை வைத்து கொண்டு, உண்மையான கணக்குகளை அவர்களுக்கும், போலியான கணக்குகளை வங்கிக்கும், பதிவாளர் அலுவலகத்திற்கும் கொடுத்து இருப்பது தணிக்கையில் தெரியவந்தது.
மேலும், சட்டவிரோதமாக பணபரிவர்த்தனையில் அந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. 3 நிறுவனங்கள் பெயரில் பெற்ற கடனுக்கு வட்டி மற்றும் அசல் செலுத்தாமல் இருந்ததால் 37.74 கோடி ரூபாய் இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதும் தணிக்கையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் சரஸ்வதி சி.பி.ஐயில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் சி.பி.ஐ போலீசார் சுரபி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மோசடி, கூட்டுசதி, பொய்யான ஆவணங்களை உருவாக்குதல், போலியான ஆவணங்களை தாக்கல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.