திருப்பூர்: திருப்பூரில் முக கவசம் அணியாமல் வந்தவரிடம் அபராதம் விதிக்கும் போது ஜாதி பெயரை கேட்டதால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து, விசாரணை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், முகக் கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர்-பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவரிடம், பெருமாநல்லூர் ஆயுதப்படை காவலர் காசிராஜன் அபராதம் விதிக்க, அவருடைய விபரங்களை சேகரிக்கும் போது, சாதி பெயரை கேட்டுள்ளார்.
அதில், ஆத்திரம் அடைந்த அந்த நபர், அபராதம் விதிப்பதில் தப்பில்லை ஆனால், எதற்காக சாதி பெயரை கேட்கறீங்கள்..? என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக, தவறு செய்பவர்களின் விவரங்களை சேகரிக்கும் பொது, ஜாதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், காவலர் முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் சாதி பெயர் கேட்பது விமர்சனத்துக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து, பெருமாநல்லூர் காவல்நிலைய பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காசிராஜனை மீண்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவிட்டார்.