கோவை: இந்தியாவில் தேசிய பட்டாம் பூச்சிக்கான தேடல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...!
கோவை: இந்தியாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேசிய சின்னங்களை நன்கு தெரிந்திருக்கும்.
தேசிய விலங்கு, தேசிய மலர், தேசிய பறவை, ஏன் தேசிய பழம் கூட உண்டு. ஆனால், தேசிய பட்டாம் பூச்சி உள்ளதா என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.
இந்தியாவில் பல்லுயிரிகள் வாழ நல்ல சீர்தோஷ்ண நிலை நிலவுவதால் பல பறவைகள் மற்றும் பட்டாம் பூச்சிகள் வலசை வருகின்றன. நம் நாட்டில் கிட்டத்தட்ட 1300 முதல் 1400 வரையிலான பட்டாம் பூச்சி இனங்கள் வாழ்கிறது. அதில் ஒரு பட்டாம் பூச்சியை தேர்வு செய்வது இயலாத காரியம். அதற்காக 50 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
ஆண்டு தோறும் பட்டாம் பூச்சி பெருவிழா உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இது தான் முதல்முறை. பெரிய விலங்குகளை பற்றி விழிப்புணர்வு செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்.
பருவமழைக்கு பிறகு பட்டாம் பூச்சிகளின் வரத்தை அனைவராலும் பார்க்க முடியும் என்பதாலும் அவற்றை பற்றி தெரிந்து கொள்ள பட்டாம் பூச்சி பெருவிழாவை இந்தியாவில் உள்ள 50 மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டோம். இப்போது தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் மூலம் வீடியோகிராஃபி, தமிழ், ஆங்கிலம் கவிதை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா, பட்டாம் பூச்சிகள் எண்ணிக்கை என இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.
இது மட்டும் இல்லாமல் இலவசமாக நிபுணர்களின் கலந்துரையாடல், ஆன்லைன் சான்றிதழ் பயிற்சி என வழங்கி வருகிறார்கள். இதில் செப்டம்பர் 14 லிருந்து 20 வரை பட்டாம் பூச்சி கணக்கெடுப்பு நிகழ்வு அந்தந்த ஊர்களில் நடைபெறும். இந்தியா முழுவதும் நடப்பதால் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
மேலும், பட்டாம் பூச்சிகளை கணக்கீடு செய்யும் முன் காலம், நேரம், வருகை நேரம், பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை, புகைப்படம் ஆகியவற்றை குறித்து வைத்து கொண்டு butterflies of india, inaturalist, india biodiversity portal போன்ற வலைதளங்களில் பதிவிட வேண்டும். இதன் மூலம் அதன் வாழ்வியலை தெரிந்து கொள்ளலாம்.
தேசிய பட்டாம் பூச்சியை தேர்வு செய்வது எப்படி ?
இந்தியா முழுவதும் உள்ள பட்டாம் பூச்சி ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள் என 50 பேர் கொண்ட குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இது பற்றி தெரிந்து கொள்ள இக்குழுவில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த சரணிடம் பேசினோம். இந்தியா முழுவதும் கடந்த 10 வருடங்களில் பட்டாம் பூச்சி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் என வந்து கொண்டு இருக்கிறார்கள்.
பட்டாம் பூச்சி குறித்த விழிப்புணர்வுகளும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதனால் இந்த பட்டாம் பூச்சி பெருவிழாவில் தேசிய பட்டாம் பூச்சியை தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாம் பூச்சி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் கொண்ட 50 பேர் குழு ஒன்றை ஆரம்பித்து 8 நிபந்தனைகளுடன் ஆளுக்கொரு 3 பட்டாம் பூச்சிகள் தேர்வு செய்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பட்டாம் பூச்சியும் சர்வதேச அளவிற்கும், கலாச்சார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை கொண்டிருக்க வேண்டும், அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும், பொதுமக்களுக்கு பழக்கப்பட்டதாக உயிரியல் அம்சத்தை கொண்டிருக்க வேண்டும், எளிதில் அடையாளம் காணக்கூடியவையாகவும், நினைவில் வைத்து கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்படும் பட்டாம் பூச்சி இனத்தில் பல்வேறு வடிவங்களை கொண்டதாக இருக்க கூடாது, எந்தவொரு பட்டாம் பூச்சிக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் பட்டாம் பூச்சி மாநில பட்டாம் பூச்சியாக இருக்க கூடாது என 8 நிபந்தனைகளின் அடிப்படையில் Common jezebel, five-bar swordtail, Krishna peacock, yellow gorgon, common nawab, northern jungle queen orange oakleaf என 7 பட்டாம் பூச்சிகள் இறுதியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது ஓட்டு எடுப்பிற்காக சமூக வகைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறோம். சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், பட்டாம் பூச்சி ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் வாக்களிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பட்டாம் பூச்சி மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் இந்தியாவிற்கான தேசிய பட்டாம் பூச்சி மத்திய அமைச்சரால் அறிவிக்கப்படும் என்றார்.
இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இக்குழுவின் ஒருவரான நீலகிரியை சேர்ந்த மனோஜ் அவர்களிடம் பேசிய போது, பட்டாம் பூச்சி பற்றிய தகவல்களை அனைவரிடம் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும்.
தேசிய விலங்கு, தேசிய பறவை இருப்பது போல தேசிய பட்டாம் பூச்சி இருப்பது அவசியமாகும். நமக்கான தேசிய அடையாளத்தை இக்கால இளம் தலைமுறையினர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
தேசிய பட்டாம் பூச்சியை இந்த லிங்கில் தேர்வு செய்யலாம்:
https://forms.gle/u7WgCuuGSYC9AgLG6