கோவை: நடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் ரசிகர் மன்றத்தினர் புகார் மனு அளித்தனர்.
கோவை: நடிகர் சூர்யாவை அவமதிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் ரசிகர் மன்றத்தினர் புகார் மனு அளித்தனர்.
சமீபத்தில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சர்ச்சை ஆகியது. நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் சூர்யாவின் பேச்சு உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றம் குறித்த விமர்சனங்கள் கூடாது என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் எங்கு சென்றாலும் நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் ஒரு லட்ச ரூபாய் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் இருந்து பெற்றுத் தரப்படும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர், கடந்த 17ம் தேதி திண்டுக்கல் மேட்டுபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் பேசியிருந்தார்.
இதே போல், கோவை மற்றும் கோபிசெட்டிபாளையம் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூர்யா என்பவர் சூர்யாவின் உருவப்படத்தை அவமதிக்கும் செயலாக நடந்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்ட சூர்யா தலைமை ரசிகர் மன்றத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
அதில், அறவழியே நம் வழி என கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருவதாகவும், சூர்யாவை இழிவுபடுத்தும் நோக்கிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தர்மா மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.