கோவை: கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, வைரஸ் தொற்று நோய்கள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் மக்களுக்கு பரிசோதனை செய்ய 20 நடமாடும் பரிசோதனை வாகனங்கள், 5 விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்று பரிசோதனைகள் வெகுவாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் ராசியால் சென்ற ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள் நிரம்பி, அது போலவே இந்த ஆண்டும் குளங்கள் மற்றும் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, கோவையில் உள்ள அனைத்து குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வருவதாகவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வைரஸ் தொற்று பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு சுமார் 7,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தற்பொழுது துவக்கி வைக்கப்பட்டுள்ள நடமாடும் பரிசோதனை மாதிரி சேகரிப்பு வாகனங்கள் மூலம் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
மேலும், இந்த வாகனத்தில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியாற்றுபவர் எனவும் இந்த வாகனத்தில் போதிய அளவிற்கு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
அதேபோல, கோவையில் இதுவரை 10 ஆயிரத்து 810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 11 லட்சத்து 63 ஆயிரத்து 212 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவையில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் வைரஸ் தொற்று சிகிச்சை பெறும் நபர்களுக்காக உள்ளன. கொடிசியாவில் உள்ள சித்த மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் 712 பேர் வைரஸ் தொற்று சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, சுண்டக்காமுத்தூர் பகுதி மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சத்து மாத்திரை தொகுப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.