கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்- 4 தேர்வு நடைபெறுவதையொட்டி வெள்ளியன்று (இன்று) சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:-

''அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, வரும் ஞாயிறன்று (6.11.2016) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்- 4 தேர்வு நடைபெறுவுள்ளது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் மட்டும் உள்ள 123 மையங்களில் 50 ஆயிரத்து 859 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
இத்தேர்வினைக் கண்காணிக்க 70 மொபைல் யூனிட்களும், 26 பறக்கும் படை குழுவும், 179 அறை கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் தேர்வினை முழுமையாகக் கண்கானிக்க ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது. மேலும், தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வெழுத பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடந்த முறை போலவே எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் தேர்வினை நடத்தும்படி, கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிதம்பரம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் சரவணன், ரசுக்கான், ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.