சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை, திருமூர்த்திமலை அணை பூங்கா, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், ,திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி ஆகிய சுற்றுலா பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் புதிய சுற்றுலா தலங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான 295 சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை முடிவெடுத்து திட்டம் தீட்டி உள்ளது.
இந்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக சுற்றுலாத் தலங்கள், சூழல் சுற்றுலா தலங்கள் , மக்களால் அறியப்படாத சுற்றுலாத்தலங்கள், அருங்காட்சியங்கள் ,தொல்பொருள் நினைவு சுற்றுலா தலங்கள் முதற்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் களஆய்வு செய்து வருகின்றனர். இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்திற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன்மலை, திருமூர்த்திமலை அணை பூங்கா, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் ,திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவி ஆகிய சுற்றுலா பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.
திருமூர்த்திமலை அணை பூங்கா திட்டம்
திருமூர்த்திமலை அணைப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது. திருமூர்த்திமலை அணைப் பகுதியை ஒட்டிய 2700 மீட்டர் நீளம் கொண்ட பொதுப்பணித்துறை நிலத்தில் ஒரு அழகிய அணை பூங்கா கட்டுவதற்கான திட்ட கருத்துரு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை, மீண்டும் செயல்படுத்துவதற்க்கான ஆலோசனை திருமூர்த்திமலை அணையின் கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி ,கோட்ட உதவி செயற்பொறியாளர் காஞ்சிதுறை மற்றும் செயற்பொறியாளர் கோபி மற்றும் உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோருடன் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடத்தினர்.
கள ஆய்வில் முதற்கட்டமாக அணைப் பகுதியில் அணை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. மலைமேல் 960 மீட்டர் உயரத்தில், மூலிகை குணம் நிறைந்த பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது .மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை ஆய்வு செய்த சுற்றுலா துறையினருக்கு, கோவில் செயல் அலுவலர் சுகுமார் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு முதல் தற்போது பக்தர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து விளக்கினார்.
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலாப் பயணிகளுக்கு பஞ்சலிங்க அருவியில் செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் மற்றும் பஞ்சலிங்க அருவியில் உள்ள குறைபாடுகள் பற்றி கள ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் த.செல்வராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் ஜவஹர், மானுப்பட்டி அரவிந்தன் மற்றும் சாயப்பட்டறை கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.