கோவை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகை, வழக்கம் போல் இல்லாமல், அவரவர் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்து கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகை, வழக்கம் போல் இல்லாமல், அவரவர் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்து கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று விசர்ஜனம் செய்யவோ, இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடையையும் மீறி, வழக்கம் போல் விநாயகர் சிலை வைத்து சிறப்பாக வழிபாடு செய்து விசர்ஜனம் செய்யப்படும், என்று இந்து அமைப்புகள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து, ஹிந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர், காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவரது அமைப்பின் நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்ட நாள் முதல் பல்வேறு நலத்திட்ட பணிகளை, தமிழகமெங்கும் செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்துள்ளது, இந்து முன்னணி கட்சி.
ஆகவே, சமூக அக்கறையோடும், பொறுப்புணர்வோடும், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், பொதுக்கூட்டங்கள் நடைபெறாது, ஊர்வலங்கள் இருக்காது, கூட்டமாக சென்று விசர்ஜனம் (விநாயகர் கரைக்கும்) நிகழ்ச்சிகள் இருக்காது என்று இந்து முன்னணி ஏற்கனவே, அறிவித்திருந்தது.
இந்நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு, தற்போது உயர்நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை சொல்லியிருக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் கொண்டாடப்படும்.
நாளை, ஆகஸ்ட் 22 ம் தேதி அன்று தனியார் இடங்களில், வீடுகளில், கோவில்களில் விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவரவர் ஏற்பாடுகளில் (கூட்டம் சேராமல்) அன்று மாலையே விநாயகர் திருமேனிகளை விசர்ஜனம் செய்கின்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அரசும், அரசு அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
விநாயகரின் அருளால் இந்த கொடிய நோய் தொற்றானது அழியும். தமிழகம் மீண்டும் நல்ல நிலையை அடையும், என தெரிவித்துள்ளார்.