கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை பெரிய கடை வீதியில் சாலை ஓரத்தில் இருந்த 3 அடி விநாயகர் சிலை சேதமடைந்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பெரிய கடை வீதியில் 3 அடி உயரம் கொண்ட சாலையோர விநாயகர் சிலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை விநாயகர் சிலை சேதம் அடைந்து இருந்ததைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து பெரியகடைவீதி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மர்ம நபர்களால் விநாயகர் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் சாலையில் செல்லும் வாகனம் மோதி உடைந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிலை இருந்த இடத்தின் அருகே இருக்கும் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட இந்து அமைப்பினர் சேதமடைந்த விநாயகர் சிலையை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய சிலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டு கடப்பாறையை கொண்டு சிலையை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.