பாதாள சாக்கடை பணியால், பொள்ளாச்சியில், போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி.
கோவை: பொள்ளாச்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை பணியால், குறுகிய பாதைகளில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்படுவதால், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சியில், கடந்த நான்குஆண்டுகளுக்கும், மேலாக பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், நகரில் உள்ள முக்கிய சாலைகளான, மார்க்கெட் ரோடு, வெங்கட்ரமணன் வீதி, புதிய திட்ட சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், நகரின் குறுகிய பாதைகளில் திருப்பி விடப்படுகின்றன.

மேலும், நேதாஜி ரோடு, ராஜா மில் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வரும் லாரிகள் மின்கம்பிகளை உரசும் அளவுக்கு அதிக பாரம் ஏற்றி வந்து, சிக்கிக் கொள்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, கனரக வாகனங்களை குறுகலான பாதையில் வருவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் அனுமதிக்கக்கூடாது, என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.