கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இருப்பதால், இந்த கால்வாய் வழியாக வரும் மழை நீரானது இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீருடன் சேர்ந்து, கால்வாய் அடைப்பு காரணமாக வெளியேறி சாலைகளில் வெள்ளம் போல தேங்கி நிற்கும் அவலம் ஏற்படும், என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளதால், மழை காலங்களில் கழிவுநீர் ஓடி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் எனவும், குறிப்பாக, தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, யானைக்கால், சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடும் என பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் முன் உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கழிவுநீர் கால்வாயை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும் எனவும், குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.