கோவை: தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்தின் 7 பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தி இருப்பதாக கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழகத்தின் 7 பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்தி இருப்பதாக கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழக ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த ஊதிய பிரச்சினை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, தேசிய பஞ்சாலை கழக அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்பு கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தேசிய பஞ்சாலை தொழிலாளர் ஊதிய பிரச்சினை தொடர்பாக பேசப்பட்டதாகவும், தேசிய பஞ்சாலை கழகம் மே 17ம் தேதி வரை முழு சம்பளமும் , ஜூன் 7ம் தேதி வரை அரை சம்பளமும் கொடுப்பதாக தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் ஊரடங்கு அரசின் அறிவிப்பு என்பதால்
பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மே மாதம் முழு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஓட்டல்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஓட்டல் தொழிலாளர்களுக்கு இரு மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வீடுகளில் மின் கணக்கீடு முறையாக செய்யப்படுவதில்லை எனவும் அதை முறையாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கோவை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தேசிய பஞ்சாலை கழக ஆலைகளை வரும் 1ம் தேதி முதல் இயக்க வேண்டும் எனவும் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.
அதேபோல, கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் ஏன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என கேட்டதற்காக திமுக எம்.எல்.ஏ கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சரியான நடவடிக்கை அல்ல என தெரிவித்த அவர், திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழக அரசினால் தமிழகத்தில் ஒரு தனியார் பேருந்தை கூட இயக்க வைக்க முடியவில்லை எனவும் லாபம் இல்லாமல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என கூறிய அவர், தனியார் பேருந்தை இயக்க வைக்க இந்த அரசுக்கு திராணி இருக்கின்றதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், விவசாயத்திற்கு எக்காரணத்தை கொண்டும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது எனவும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.