கோவை: ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்தும் மின்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கோவை: ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்தும் மின்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நோய்தொற்று பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கான இறுதி தேதி மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
மின்வாரியமும் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை அதற்கு முந்தைய மாத கட்டணத்தை கட்டலாம் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 310 யூனிட்களுக்குள் பயன்படுத்தி வந்த மின்நுகர்வோர் ரூ.560 கட்டணமாக கட்டிய நிலையில், தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1240 யூனிட் என தீர்மானித்து ரூ.4584 கட்டணத்தை கட்டுமாறு, கோவையைச் சேர்ந்த மின்நுகர்வோர் பத்மநாதன் என்ற பயனீட்டாளருக்கு மின்வாரியம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, ஒரு யூனிட் பயன்பாட்டுக்கு ரூ.1.80 கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 3.60 கட்டணமாக செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது அந்த ஒரு மின் பயனீட்டாளருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மின் பயனீட்டாளருக்கும் இது பொருந்தும்.
அரசு அறிவிப்பின்படி 100 யூனிட் குறைவாக பயன்படுத்தும் நுகர்வோருக்கு மாத கட்டணம் ஏதும் வசூல் செய்யப்படுவது இல்லை. அதேபோல், மாநில அரசு ஒவ்வோரு குறிப்பிட்ட யூனிட் அளவுக்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. இதன்படி, மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் மாறும்.
தற்போது கொரோனா காலத்தில் மின்வாரியம் எவ்வித கட்டண சலுகையும் மின் பயன்பாட்டின்படி அளிக்காமல் மூன்று மாதத்துக்கான மொத்த பயன்பாடு மின் யூனிட்டையும் கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்துமாறு கூறியுள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்லாமல் மாத வருமானம் இழந்து தவிக்கும் சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் செயலாகும்.
தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்துதான் தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பகுதி தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான தொழில்கள் தொடங்கப்படாமல் முடங்கியுள்ளதால் மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். மின் கட்டணத்தில் இருந்து விலக்கும் அளிக்குமாறு சிறு, குறு தொழில் அமைப்புகள் கோரி வருகின்றன.
இந்த நிலையில், கட்டணத்தை மறைமுகமாக ஏற்றியுள்ளதோடு, வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு கூடுதல் நெருக்கடி தரும் வகையில் மின்வாரியத்தின் செயல்பாடு இருக்கிறது. இது கண்டிக்கத்தகுந்ததது. இந்த போக்கை மின்வாரியம் உடனடியாக கைவிட வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.