கோவை தடாகம் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் 182 செங்கல் சூளைகளை மூட கோவை வடக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை..?
கோவை: கோவை தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி இயங்கும் 182 செங்கல் சூளைகளை மூட கோவை வடக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது, என சமூக ஆர்வலர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் கணேஷ் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, கோவை வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இப்பதிலை அளித்துள்ளது, என தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக மாசுகட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதியில் 192 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதில் பல செங்கல் சூளைகள், எவ்வித அனுமதியின்றி பெறாமல் செயல் படுவதாக சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. விளை நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் மட்டுமின்றி நீர் நிலைகளையும் விட்டு வைக்காமல் மண் வளம் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறது, என வீடியோ ஆதாரத்துடன் செய்திகள் வெளியிடப்பட்டது.
"கனிமவள விதிப்படி அனுமதி பெற்ற அரசு நிலங்களாக இருந்தாலும், தனியார் நிலங்களாக இருந்தாலும் சரி, 3 அடி ஆழத்துக்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும், கனரக வாகனங்களை பயன்படுத்த கூடாது, பக்கத்து நிலங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் போதிய இடைவெளியில் மண் எடுக்க வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளன", என தெரிவித்தார், கணேஷ், சமூக நல ஆர்வலர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நிலங்கள் இருந்த இடங்கள் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி வருவதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, விவசாயம் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நிலம் மற்றும் நீர் வளம் மிகுந்த பகுதியில் 20 அடி முதல் 150 அடி வரை தோண்டி செம்மண் எடுக்கப்படுவதால், ஊர் முழுக்க பள்ளங்களாகவும், குழிகளாகவும் மாறியுள்ளதாகவும், மாசு, புகை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும், வனவிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
"அண்மையில் செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்பதும், தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தினை விட அதிகமான ஆழத்திற்கு செம்மண் எடுக்கும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் கோவை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் எழுதியது தெரியவந்தது.

இந்நிலையில் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் 182 செங்கல் சூளைகளை மூட கோவை வடக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் தமிழக மாடு கட்டுப்பாடு வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது", என கணேஷ் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி 18 ம் தேதி முதல் மார்ச் 6 ம் தேதி வரை 182 செங்கல் சூளைகளை மூடுதல் உத்தரவு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 192 செங்கல் சூளைகளில் 182 செங்கல் சூளைகளை மூட மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்திருந்தாலும், தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் செங்கல் சூளைகள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, என குற்றம் சாட்டியுள்ளார், கணேஷ்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் கோவை வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுகள் மேற்கொண்டு செங்கல் சூளைகளை மூட பரிந்துறை அளித்தும் இதுவரை தமிழக மாடுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும், கொரனா ஊரடங்கு கடந்த மார்ச் 24 முதல் மே மாதம் 4ம் தேதி வரையிலான காலங்களில் செங்கல் சூளைகள் இயங்காமலிருந்ததன் விளைவாக அப்பகுதி மக்கள் தூய்மையான காற்று, சுகாதாரமான சூழல் இருந்தது எனவும் தற்போது கடந்த மே 5ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு காரணமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாகவும், அதிகமாக லாரிகளில் ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண் அள்ளப்பட்டுவருவதாகவும் குற்றம் சாட்டினர்.