நீலகிரி: குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம் செய்ய சென்ற குன்னூர் எம்எல்ஏ காரை கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் பகுதியில் கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம் செய்ய சென்ற குன்னூர் எம்எல்ஏ காரை கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

அதேபோல, குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகத்திற்குட்பட்ட பாபு கிராமத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்க குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது, கிராம எல்லையில் கன்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் பாரதியார், கவுன்சிலர்கள் துரைராஜ், சீனிவாசன், மேரி ஷிபா, லதா ஆகியோர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு காரை முற்றுகையிட்டு கறுப்பு கொடி காட்டி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு காரை விட்டு இறங்கி தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று நிவாரண பொருட்கள் வழங்கினார்.
து குறித்து துணைத் தலைவர் பாரதியார் கூறும்போது, கடந்த 4 ஆண்டுகளில் கன்டோன்மெண்ட் பகுதிக்கு எம்.எல்.ஏ ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்க வில்லை. மேலும் நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து துணைத் தலைவரான என்னிடமோ, அதிமுக நகரிய செயலாளர் துரைராஜிடமோ கலந்து பேசவில்லை. நிவாரண பொருட்கள் வழங்குவதிலும் பாரபட்சம் காட்டி வழங்கியுள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் கருப்பு கொடி காட்டி எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று கூறினார்.
இது குறித்து குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு கூறும் போது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தப்பட்டதாகும். நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவிகள் செய்துள்ளேன். ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்பு 3வது வார்டிற்கு 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தேன். இதற்கான அப்ரூவல் இதுவரை எனக்கு கன்டோன்மென்ட் போர்டு மூலம் கிடைக்கவில்லை. துணைத் தலைவர் மற்றும் அவருடன் உள்ள உறுப்பினர்கள் என்னிடம் இதுவரை நிதி ஒதுக்க கேட்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தலைமைக்கு தெரிவிக்க உள்ளேன் என்று கூறினார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.விற்கு அதிமுகவினரே கருப்பு கொடி காட்டி காரை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.