திருப்பூர்: குற்றவாளியுடன் கைகோர்த்துக் கொண்டு, கடமையை செய்ய தவறிய பல்லடம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாகூர் மீரான் என்பவர் மனு அளித்துள்ளார்.
திருப்பூர்: குற்றவாளியுடன் கைகோர்த்துக் கொண்டு, கடமையை செய்ய தவறிய பல்லடம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாகூர் மீரான் என்பவர் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் காவல் நிலையத்திலிருந்து ஆவணங்களை திருடி அதை முறைகேடாக மாண்பமை மனித உரிமைகள் ஆணையத்தில் பயன்படுத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி 20-01-2020 தேதியிட்ட பதிவுத்தபால் மூலமாக பல்லடம் காவல்
நிலையத்தில் அனைத்து ஆதாரங்களுடன் புகாரளித்தேன். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த 23-04-2020 அன்று இணையதளம் வாயிலாக விளக்கம் கேட்டு புகார் அனுப்பினேன் (புகார் எண்:1101120041299). அதற்கும் எந்த பதிலும் இல்லாமல் போகவே கடந்த 12-05- 2020 அன்று விளக்கம் கேட்டு மீண்டும் இணையதளம் வாயிலாக புகார் அனுப்பினேன் (1101120040441).
மேலும், என்னுடைய இரண்டு இணையதள புகாருக்கும் 24-05-2020 அன்று பல்லடம் காவல் துறை அளித்துள்ள பதிலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த பதிலில் எனது புகார் சம்பந்தமாக சத்தியமூர்த்தி அவர்களை அழைத்து விசாரித்ததாகவும், அவர் நாகூர் மீரான் மீது போடப்பட்ட FIR நகல்களை யாரிடம் பெற்றேன் என்பதை மறந்துவிட்டதாக எழுதிக் கொடுத்துள்ளதாகவும் ஆகவே எனது புகார் மீது மேல் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும் பதிலளித்துள்ளனர்.
இணையதள புகார் எண் HUN20041299 மற்றும் HUN20046441 மீது பல்லடம் காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட பதில் சட்டத்திற்கு புறம்பானது. எனது 1491/2015 மற்றும் 1098/2018 ஆகிய எண் கொண்ட முதல் தகவலறிக்கை நகல்களை பல்லடம் காவல் நிலையத்தில் வேண்டுகோள் கடிதம் கொடுத்துதான் பெற்றதாக சத்தியமூர்த்தி அவர்களே எனக்கு விளக்க கடிதம் அளித்துள்ளார். அதையும் சான்று ஆவணமாக இணைத்துத்தான் நான் கடந்த 20-01-2020 தேதியிட்ட புகாரளித்தேன். அப்படி இருக்கும் போது சத்தியமூர்த்தியை அழைத்து விசாரித்ததாகவும், அவர் யாரிடம் வாங்கினார் என்பதை மறந்துவிட்டதாக சொன்னதாகவும் ஆகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று காவல் துறை அளித்துள்ள பதில் வேடிக்கையாக உள்ளது.
பல்லடம் காவல்நிலையத்தில் இவ்வாறு தவறு நடந்ததற்கு பல்லடம் காவல் ஆய்வாளர் அவர்களே முழுப் பொறுப்பாகிறார். மேலும் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக சட்டப்படி செயல்பட வேண்டிய ஆய்வாளர் அவர்கள் தன் கடமையிலிருந்து தவறி குற்றத்திற்கு துணை போயுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
எனவே குவிமுச 1973 ன் பிரிவு 197 ன்படி பல்லடம் காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்க வேண்டுகிறேன். அவ்வாறு உரிய காலத்திற்குள் தாங்கள் அனுமதி அளிக்காத பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர எவ்வித தடையுமில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.