திருப்பூர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிர்வாகங்கள் சீர் செய்ய வேண்டும் என திருப்பூரில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் உள்ள குளறுபடிகளை மாவட்ட நிர்வாகங்கள் சீர் செய்ய வேண்டும் என திருப்பூரில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனவும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கும் மாவட்ட நிர்வாகங்கள் அவற்றில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், எட்டு மணி நேர வேலை நேரம் திட்டத்தை 12 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதோடு ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல, தொழில் துறையினரின் முக்கியமான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும் எனவும் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படும் போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகங்களே இழப்பீடு நிர்ணயம் செய்யும் உரிமை உள்ள சூழலில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.