கோவை: பணி நேர உயர்வு, பொது துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்டவைகளை கண்டித்து சி.பி.ஐ(எம்) சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: பணி நேர உயர்வு, பொது துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்டவைகளை கண்டித்து சி.பி.ஐ(எம்) சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொரோனா கால பொது முடக்கத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் வேலை நேரம் 8 என்பதை மாற்றி 12 மணி நேரமாக உயர்த்தி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வருவாயின்றி தவித்து வரும் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக நெருக்கடியில் உள்ளனர்.
இந்நிலையில், கால அவகாசம் வழங்காமல் கடனை திருப்பி செலுத்த வங்கிகள் நெருக்கடி, கல்வி நிலையங்களின் நெருக்கடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பம் என நாடு முழுவதும் மக்கள் அல்லல்படும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு கார்ப்ரேட்டுகளுக்கு தங்களுடைய விசுவாசத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருவதாகவும் இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய அளவில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன நாள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்களின் போராட்ட அழைப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய, தாலுகா, நகரக்குழு மற்றும் கிளைகளில் கண்டன இயக்கங்கள் நடைபெற்றது.
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ கே.சி.கருணாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், அஜய்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.