கோவை: ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மீது 3 பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மீது 3 பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
"கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் தனி அலுவலரால் நிறைவேற்றப்பட்ட சுமார் 4000த்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் எதுவும் கோவை மாநகராட்சியின் இணைய தளத்தில் பதிவேற்றப்படாததின் மர்மம் என்ன? தீர்மானங்களை பதிவேற்றினால் எங்கே தாங்கள் செய்த முறைகேடுகள் எல்லாம் வெளியே வந்து விடுமோ? என்ற அச்சம் காரணமாகவே மாநகராட்சியின் தீர்மானங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் மாநகராட்சி காலந்தாழ்த்துகிறதா? மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும்“ என்ற பழமொழிக்கேற்ப மாநகராட்சியின் நடவடிக்கைகள் உள்ளது என கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அறிக்கை விடுத்திருந்தார்.
மேலும், அவர் அந்த அறிக்கையில், கோவை மாநகராட்சியில் எந்த ஒரு பணியாக இருந்தாலும், மாநகராட்சி தனி அலுவலர் தீர்மானம் இயற்றி பணிகளை ஒப்பந்ததாரருக்கு ஒதுக்கலாம். இந்த தீர்மானம் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால்தான் எந்த வேலை எங்கு, எவ்வளவு தொகைக்கு செய்யப்பட்டுள்ளது என்பது மக்களுக்கு தெரியவரும்,
தீர்மானங்கள் இணையத்தில் பதிவேற்றப்படாததால் எந்த வேலை நடந்து உள்ளது என்பதே தெரியவில்லை. தீர்மானத்தை நிறைவேற்றி பணியே நடக்காமல் பணிகளை முடித்ததாக கூறி ஒப்பந்ததாரர் முறைகேடு செய்திருந்தாலும் மக்களுக்கு தெரிய வராது, எனஅறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த ஒப்பந்தப் பணிகள் பெரும்பாலும் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கும், பினாமிகளுக்கும் தான் வழங்கப்பட்டுள்ளது, என குற்றம் சாட்டினார்.
மேலும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் பணிகள் வழங்கப்படுவதில்லை, எனவும் இவர் கைகாட்டும் நபருக்குத்தான் மாநகராட்சி டெண்டர்கள் வழங்கப்படுகிறது, எனவும். இதை மீறும் ஒப்பந்ததாரர்கள் மிரட்டப்படுகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆலயம் பவுண்டேஷன் என்ற அமைப்பின் இயக்குனர் ரங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் நா.கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டது.
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உதவியுடன் ஆலயம் பவுண்டேசன் நிறுவனம் டெண்டர் பெற்றிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை எம்.எல்.ஏ கார்த்திக் வெளியிட்டுள்ளார் என்ற புகாரின் அடிப்படையில் அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடையாமல் முடக்கும் எண்ணத்துடன் தங்கள் நிறுவனத்தையும் அமைச்சரையும் இணைத்து பொய்யான தகவல்களை எம்எல்ஏ கார்த்திக் பரப்புகிறார் என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அப்புகாரின் பேரில் கலகத்தை விளைவித்தல், அமைதியை சீர்குலைத்தல், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நா.கார்த்திக் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.