கோவை: மேட்டுப்பாளையத்தில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 5 நபர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 5 நபர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிதுறை காப்பு காட்டில் புலி, சிறுத்தை, யானை, கடமான், புள்ளி மான் மற்றும் காட்டுமாடு என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இவற்றில் கடமான் ஒன்றை வனத்தில் இருந்த ஊண் உண்ணியால் வேட்டையாடப்பட்டு, அது சாப்பிட்ட மீதியை வனப் பகுதிக்கு அருகிலுள்ள நெல்லித்துறை கிராமம், நந்தவனப் புதூரை சேர்ந்த தாசன் மகன் கிருஷ்ணன்(43) மற்றும் பழனியப்பன் மகன் செல்வராஜ்(49) என்ற இரண்டு நபர்கள் பார்த்து, அவற்றிலிருந்து 5 கிலோ கறியை வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
பின்னர், அந்த கடமான் கறியை அவர்களது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் ராமசாமி(37), ரங்கசாமி மகன் செல்வம்(45), தங்கமுத்து சின்னமணி(42) ஆகிய மூவருக்கும் பிரித்து கொடுத்து சமைத்து உள்ளனர்.
இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்து, மான் கறியை கைப்பற்றினார். இந்த வழக்கை மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சு.செல்வராஜ், சுண்டபட்டி பிரிவு வனவர் ஸ்ரீராம், மேட்டுப்பாளையம் பிரிவு வனவர் சுரேஷ், சுண்டபட்டி சுற்று வனக்காப்பாளர் விஜயகுமார், கல்லார் சுற்று வனக்காப்பாளர் அரவிந்தன், சுண்டபட்டி சுற்று வனக்காவலர் சடையன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழுவாக இணைந்து திறம்பட செயல்பட்டு வழக்குபதிவு செய்தனர்.
மேலும், இந்த வழக்கின் எதிரிகள் ஐந்து நபர்களுக்கும் தலா ரூ.10,000/- வீதம் ரூ.50,000/- அபராதம் விதித்து பிணையில் விடப்பட்டனர்.