விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகரால் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள திருமதுரை கிராமத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவா், அப்பகுதியில் தனது தந்தை நடத்தி வரும் பெட்டிக் கடையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் தீக்காயங்களுடன் கிடந்தாா். உடனடியாக அவா் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா் காவல்துறையினர் மாணவியிடம் நடத்திய விசாரணையில், அதிமுக பிரமுகர்கள் இருவா் அதே கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் முருகன் (51), கந்தசாமி மகன் யாசகம் என்கிற கலியபெருமாள் (60) ஆகியோர் தன்னை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் ஆகிய 2 பேரை நேற்று இரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார். சிறுமியின் குடும்பத்தினரோடு இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இன்னும் 7 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொலை வழக்கில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் இருவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.