கேரள மாநில அரசிடம் இ-பாஸ் பெறாமல் வாளையாறு வழியாக கேரளா செல்ல முயற்சிக்க வேண்டாம் - கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு.
கோவை: கோவையிலிருந்து கேரளா செல்ல முயற்சிப்பவர்கள், கேரளா அரசிடம் இ-பாஸ் பெறாமல் வாளையாறு வழியாக கேரளா செல்ல முயற்சித்து, ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
உரிய இ-பாஸ் இல்லாதவர்கள் கேரளாவிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால், வாளையாறு வழியாக கேரளாவுக்கு செல்ல பொதுமக்கள் முயற்சி செய்து சிரமப்பட வேண்டாம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கோவிட்-19 வைரஸ் பரவுவதைதடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் கோவைமாவட்ட மற்றும் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான, மற்றும் அவசர பயணங்கள் மேற்கொள்பவர்கள் மட்டும் உரிய இ-பாஸ் பெற்று பயணம் மேற்கொள்ள அரசுகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கேரளாவை பொறுத்தவரை கெடுபிடிகள் அதிகமாக உள்ளதால், கோவையிலிருந்து கேரளா எல்லைகளில் அனுமதிகள் பெறுவதில் சிரமம் தொடர்ந்துவருகிறது.
இந்த நிலையில், ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், சமீப காலமாக கோவையிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கேரளா மாநிலம் செல்ல வாளையார் செக்போஸ்ட் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆனால் கேரள போலீசார் தொடர்ந்து அனுமதி மறுப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக வருகிறது.
அதேபோல, கேரளா மாநிலம் செல்ல விரும்புகிறவர்கள் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே கேரளா எல்லைக்குள் கேரளா போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதை கருத்தில் கொண்டு மக்கள் உரிய பாஸ் பெற வேண்டும், என கோவை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.