நீலகிரி: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க 98 சதவீத பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீலகிரி: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க 98 சதவீத பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்து, ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய சூழ்நிலையில் மக்களின் மனநிலை, பொருளாதார நிலை மற்றும் அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் கள ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு உதகையில் வெளியிட்டார்.
கள ஆய்வின் முடிவுகள் குறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எங்கள் அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியது. தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் தலா 100 பேரிடம் 21 கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் பதில்கள் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டு தகவல் கொடுக்கிறோம்.
அதன் அடிப்படையில், ஊரடங்கு முன்னதாக அறிவித்திருக்க வேண்டும் என 49% மக்கள் தெரிவித்தனர். மேலும், ஊரடங்குக்கு பின்னர் அதிமுக அரசின் செயல்பாடுகள் பரவாயில்லை என்று 53% மக்களும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போதுமான முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று 66% மக்களும் மத்திய அரசின் செயல்பாடுகள் மோசமானவை என 67% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் நிவாரணம் போதுமானதாக இல்லை என 89% மக்களும் இது போன்ற பேரிடர் காலகட்டத்தில் மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்து கட்சிகளின் ஆலோசனையை புறக்கணிப்பது சர்வாதிகாரமானது என 81% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு மக்களின் கொரோனா வைரஸ் குறித்து ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், திடீரென மதுக்கடைகளை திறந்தது அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 98 சதவீத பெண்கள் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு சூழ்நிலையில் நடுத்தர மக்களின் வாழ்க்கை படு மோசமாக உள்ளது. ஊரடங்கு மே 17ம் தேதிக்கு பின்னர் நீட்டிக்கப்பட்டால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்றும், ஊரடங்கிற்கு பின்னர் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என கள ஆய்வு தெரிய வந்துள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் திமுகவுக்கு களம் சாதகமாக உள்ள நிலையில், அவர்கள் தேர்தல் யுக்தியில் தவறிழைத்தால், அதிமுக லாபமடையும், இவ்வாறு அவர் கூறினார்.