கோவை: கோவையில் முழு சம்பளத்தை வழங்காத தனியார் மருத்துவமனையை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவையில் முழு சம்பளத்தை வழங்காத தனியார் மருத்துவமனையை கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலை 9வது வீதியில் பீரீத்தி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்று வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவை காரணமாக காட்டி ஊழியர்கள் அனைவருக்கும் 20 முதல் 30 சதவீத சம்பளத்தை மட்டுமே மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது.
செவிலியர்களுக்கு 20 சதவீத ஊதியமாக 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வழங்கப்பட்டதால் ஆவேசமடைந்த செவிலியர்கள் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கொரோனா காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் மருத்துவமனையில் ஒரு மாதமாக தங்கி பணிபுரிந்த நிலையில் தங்களுக்கு சம்பளத்தை மிக குறைந்த அளவில் நிர்வாகம் வழங்கி உள்ளதாகவும் முழு சம்பளம் கேட்டால் வேலையை விட்டு போக சொல்வதாக தெரிவித்தனர். தங்களது சம்பளத்தையே நம்பியே குடும்பம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் உயிரை பணையம் வைத்து வேலை பார்த்த நிலையில் ஊதியத்தை மருத்துவமனை நிர்வாகம் பிடித்து இருப்பதாகவும் செவிலியர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்ட போது, கடந்த மாதம் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மருத்துவமனைக்கு நோயாளிகள் யாரும் வரவில்லை எனவும் வருவாய் இல்லாததால் ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க முடியவில்லை என மருத்துவமனை தலைமை மருத்துவர் தண்டபாணி தெரிவித்தார். வருவாய் சீரானவுடன் செவிலியர்களுக்கு முழு சம்பளம் வழங்க இருப்பதாகவும் இதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என தலைமை மருத்துவர் தண்டபாணி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, வட்டாட்சியர் மகேஷ்குமார் அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை பெற்று தந்துள்ளார். ஊரடங்கு முடிந்த பின் அனைவரும் ஊருக்கு செல்லலாம், அதுவரை அம்மருத்துவமனையில் பணிபுரியலாம் என செவிலியர்களிடம் தெரிவித்தார்.