நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் இப்பகுதி மக்கள் இதனை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலனளிக்கவில்லை.
தற்போது ஊரடங்கிற்குப் பின் தனிமனித இடைவெளியோடு மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்காக அமைக்கப்பட்ட சுமார் நூறு மீட்டர் தடுப்பு வேலியினை அமைக்கும் போது குடியிருப்புகளையும் சேர்த்து வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், குடியிருப்பு வாசிகள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்ற போது, உயரதிகாரிகள் வந்து முடிவெடுப்பார்கள் என்று கூறுகின்றனர். குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நகர் பகுதிக்கு வெளியே அமைத்தால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.