கோவை: கோவையில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பீளமேடு அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். கருப்புச் சட்டை மற்றும் முகக்கவசம் அணிந்து முழக்கங்களை எழுப்பினார்.

இதேபோல காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் வீட்டின் முன்பும் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மதிமுகவினரும், திருச்சி சாலை கருணாநிதி நகர் பகுதியில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி தலைமையிலும் சிரியன் சர்ச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் கருப்பு கொடி ஏற்றினர்.

மேலும் கருப்பு கொடிகளுடன் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல, மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உக்கடம், ஆத்துப்பாலம், போத்தனூர், கரும்புக்கடை, சூலூர், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், குனியமுத்தூர் ரோடு, புல்லு காடு, செல்வபுரம் போன்ற அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.